செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
சிதம்பரம் அருகே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
சிதம்பரம்:
சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கும், கிள்ளை ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் விவரம் வருமாறு:-
தற்கொலை
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஆண்டனி லாசர் மகன் ஆண்டனி ஜோசப்ராஜ்(வயது 35). இவரது மனைவி ரூபிமெட்ல்டா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. ஆண்டனி ஜோசப்ராஜ், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் நேரில் சென்று உணவு கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொள்வதற்காக இரவு 8.30 மணி அளவில் தண்டவாளத்துக்கு வந்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு ஆண்டனி ஜோசப்ராஜ் பாய்ந்தார். இதில் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலியானது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இது குறித்து இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.