செல்போன் கோபுரத்தில் ஏறி 4 மணி நேரம் தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்

பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி 4 மணி நேரம் தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-12 18:53 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி 4 மணி நேரம் தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கதிரவன் (வயது36). இவர் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரியும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மே 26-ந் தேதி வீரசோழன் ஆற்றின் நடுவே தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது அந்த வழியாக சென்ற கலெக்டர் லலிதா, கதிரவனிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். உடனடியாக அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தலைகீழாக நின்று நூதன போராட்டம்

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கதிரவன் நேற்று காலை 8 மணிக்கு பொறையாறு அருகே சங்கரன்பந்தலில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி 160 அடி உயரத்தில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.நீண்ட நேரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், கதிரவனுக்கு ஆதரவாக பொதுமக்கள் திடீரென பொறையாறு-ஆடுதுறை சாலையில் இலுப்பூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

4 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் கோபுரத்தில் நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தரங்கம்பாடி தாசில்தார் புனிதா சம்பவ இடத்துக்கு வந்து ஒலி பெருக்கி மூலம் கதிரவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கதிரவனை செல்போனில் தொடர்பு கொண்டு கீழே இறங்கி வர அறிவுறுத்தினார். அப்போது, கலெக்டர் வந்தால் தான் இறங்கி வருவேன் என்று கதிரவன் கூறினார்.

எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்

அதனைத் தொடர்ந்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் எழுத்துபூர்வமாக உறுதியளித்தார்.இதையடுத்து தரங்கம்பாடி தீயணைப்பு துறை நிலைய சிறப்பு அலுவலர் அருண் மொழி தலைமையில் செல்போன் கோபுரத்தில் இருந்து கதிரவனை பத்திரமாக கீழே இறக்கினர்.

பரபரப்பு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என கதிரவன் தெரிவித்தார்.இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பொறையாறு-ஆடுதுறை சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்