பட்டாசு கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் நடத்த அனுமதிக்க கூடாது
விபத்துகள் ஏற்படாமல் இருக்க பட்டாசு கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் நடத்த அனுமதிக்க கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வியாபாரிகள் வலியுறுத்தினர்.
ஆலோசனை கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி- கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் செந்தில்குமார் (வேலூர்), ஜெகதீஸ்வரன் (காட்பாடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் பேசியதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிப்பு ஏற்படுகிறது. ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.
அனுமதி பெறாமல்...
அனுமதி பெறாமலும் பலர் ஆங்காங்கே பட்டாசு விற்பனை செய்கின்றனர். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாதிக்கிறது. எனவே சில்லறை விலையில் ஆங்காங்கே பட்டாசுகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் இதற்கு பதிலளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-
உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசுகள் விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடமோ புகார் தெரிவிக்கலாம்.
மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும். மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இதுபோன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து இந்த தீபாவளியை விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு பட்டாசுகள் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர் அவர் கூறினார்.