டீக்கடை தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

புளியங்குடி அருகே டீக்கடை தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

புளியங்குடி:

டீக்கடை தொழிலாளி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈசனபத்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி கனகா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மாரியப்பன் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று கூறி, மனைவியிடம் ரூ.500 வாங்கி கொண்டு வெளியில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் காலையில் புளியங்குடி அருகே கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நவாச்சாலை செல்லும் வழியில் சாலையோரம் விவசாய நிலம் அருகில் மாரியப்பன் உடலில் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

அந்த வழியாக விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

உடனே இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். மாரியப்பனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

புளியங்குடி அருகே டீக்கடை தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்