டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை 'ஜோர்'

கோடை காலத்தையொட்டி கடலூரில் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை ஜோராக நடைபெறுகிறது. வேகமாக விற்று தீர்ந்து விடுவதால், கூடுதலாக பீர் பாட்டில்களை இருப்புவைக்க கோரிக்கை எழுந்துள்ளது.;

Update:2023-05-19 00:15 IST

பட்டையை கிளப்பும் வெயில் நேரங்களில் 'மோர்' குடித்தால் நன்றாக இருக்குமே... என்று நினைத்தால் அது சாதாரண மக்களின் மனநிலை. அதே 'பீர்' குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால், அது மதுபிரியர்களின் மனநிலை. அதுவும் கோடைகாலம் வந்தாலே போதும் 'சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது' என்கிற வகையில் மதுபிரியர்களின் ஒரே எண்ண ஓட்டம் பீரின் மீது தான் இருக்கும்.

குறிப்பாக கடலூரில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அதுவும் சில நாட்களாக அதிகப்படியான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மனதையும், உடலையும் குளிர்ச்சியாக்கி கொள்ள மதுபிரியர்கள் பீரை தேடி டாஸ்மாக் கடைகளை நாடுகிறார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு மேலாக பல கடைகளில் பீர் கிடைப்பதில்லை.

இரு ரகங்கள் மட்டுமே

இப்படி விற்பனை ஜோராக நடப்பதால் பல கடைகளில் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுவாக 40-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் இருந்தாலும், பெரும்பாலான கடைகளில் இரு ரகங்களில் மட்டுமே கிடைக்கிறது. அதேவேளை வெளிநாட்டு மதுவகைகள் விற்கப்படும் 'எலைட்' கடைகளிலும் பீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அங்கு கடந்த சில நாட்களாவே பீர் பாட்டில்கள் முழுவதும் மாலை 6 மணிக்குள்ளாகவே தீர்ந்து விடுவதாக பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பீர் கிடைக்காததால் மதுபிரியர்கள் பலர் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் பீர் பாட்டில்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக வழங்க நடவடிக்கை

இதற்கிடையில் கோடைகால விற்பனையை கருதி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பீர் பாட்டில்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 143 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு 4 நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் சுமார் 20 வகையான பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கடைகளுக்கு வழக்கமாக 2 ஆயிரம் கேஸ்களில் (ஒரு கேஸ் என்றால் 12 பாட்டில்கள்) பீர் வழங்கப்படுகிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பீர் வகைகள் கூடுதலாக விற்பனை ஆகிறது.

அதாவது தினசரி மாவட்டத்தில் 2,500 கேஸ் பீர் விற்பனையாகிறது. அதுவும் சில கடைகளில் முன்கூட்டியே பீர் வகைகள் மட்டும் தீர்ந்து விடுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அந்த கடைகளிலும் தட்டுப்பாடின்றி பீர் பாட்டில்களை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்