டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்

போராட்டத்துக்கு பொதுமக்கள் தயாரானதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.;

Update: 2023-06-08 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் பெண்கள் அவ்வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் தினம், தினம் வீண் பிரச்சினை ஏற்படுகிறது என்பதால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அறிவுறுத்தியதன்பேரில் டாஸ்மாக் கடையை அதன் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு அந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடும் என்று கருதி அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு தயாராகினர். இதற்காக அங்கு போலீசாரும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதி பெண்கள், அந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்தனர். ஆனால் கடையை அதன் ஊழியர்கள் திறக்காமல் இருப்பதை அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்