டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

மானாமதுரையில் அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.;

Update: 2023-08-21 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரையில் அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.

டாஸ்மாக் கடை

சிவகங்ைக மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக பூமி என்பவரும், விற்பனையாளர்களாக அய்யனார், கருணாநிதி ஆகியோரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் தினந்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதுபாட்டில்களும், விசேஷ காலங்களில் ரூ.6 லட்சம் வரையிலும் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் முகூர்த்த நாள் என்பதாலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததாலும் டாஸ்மாக் கடையில் ரூ.6 லட்சத்திற்கும் மேல் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

இதையடுத்து வழக்கம் போல் கடை நேரம் முடிந்தவுடன் இரவு அந்த பணத்தை எண்ணிய விற்பனையாளர்கள் கடையின் உள்புறத்தில் உள்ள இரும்பு லாக்கரில் ரூ.6 லட்சத்தை வைத்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

இதையடுத்து நேற்று வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் இரும்பு ஷட்டர்கள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த கடையின் இரும்பு ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி உள்ளனர்

. மேலும் அந்த கடையில் பணம் வைக்கும் இரும்பு லாக்கரை உடைக்க முயன்று உள்ளனர். அவற்றை உடைக்க முடியாததால் அதை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் லாக்கரில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது. மேலும் இதுகுறித்து சிவகங்கை கைரேகை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்