டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட அரசு டாஸ்மாக் குடோன் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கூலி உயர்வு கேட்டு போராடும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களை போலீசாரை கொண்டு மிரட்டி, தொழில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கூலி உயர்வு பிரச்சினையில் தலையிட்டு, மதுபாட்டில்கள் பெட்டி இறக்குவதற்கான கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மதுபாட்டில்களை இறக்க முடியாமல் டாஸ்மாக் கிடங்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.