டாஸ்மாக் ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கி பணம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கி பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கி பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் ஊழியர்
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் கடையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (வயது 21), லெனின் மகன் சரவணன் (22), தூத்துக்குடி லோகியாநகரை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28) ஆகிய 3 பேரும் மது குடித்து உள்ளனர்.
பீர்பாட்டிலால் தாக்குதல்
அப்போது அங்கு திடீரென்று மதுபாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை விற்பனையாளர் சங்கர் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தனர்.
திடீரென அவர்கள் பீர்பாட்டிலை உடைத்து சங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த விற்பனை பணம் ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
3 வாலிபர்கள் கைது
தாக்குதலில் காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூர்த்தி, பிரபாகரன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் மூர்த்தி மீது தென்பாகம், சிப்காட், தெர்மல்நகர், ஆத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளன.
டாஸ்மாக் கடையில் ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------------