டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல்
டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல்
திருவாரூரில் டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எதிர்ப்பு
திருவாரூர் விளமல் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் டாஸ்மாக் மது கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் மது ஆலைகளில் இருந்து வரும் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கிடங்கில் 109 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மதுபாட்டில்களை ஒப்பந்த வாகனங்களில் ஏற்றி சென்று டாஸ்மாக் சில்லறை கடைகளில் இறங்கி வருவது வழக்கம். இதில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபாட்டில்களை வாகனங்களில் ஏற்றுவதற்கு மட்டுமே கூலி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த வாகனங்களை உரிமம் எடுத்தவர், தங்கள் வாகனங்களில் மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் இறக்குவதற்கான பணிக்கு புதிதாக தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தனர்.
இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், வாகன ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
சாலைமறியல்
இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விளமல் கல்பாலம் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர் அனிபா, டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மீண்டும் டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு செய்து கொள்ளலாம் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் திருவாரூர்-நாகை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.