நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.;
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
தொடக்க கூட்டுறவு கடன் சங்கம்
ராமநாதபுரத்தில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பிரதான பயிர்களான நெல், மிளகாய், பருத்தி பயிர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் 20,838 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி கடன் வழங்கப்பட்டது. 2022-23-ம் ஆண்டில் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் 131 சங்கங்களிலும் பயிர்க்கடன் மேளா நடத்தப்பட்டு 42,595 விவசாயிகளுக்கு ரூ.261.78 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள கடன் கடந்த ஆண்டில் 7,307 விவசாயிகளுக்கு ரூ.101.37 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தது.
ரூ.500 கோடிக்கு பயிர்க்கடன்
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2023-24) பயிர்க்கடன் குறியீடாக ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் கடன் தொகையை இருமடங்காக உயர்த்த அனைத்து சங்க செயலாளர்களையும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகள் சங்கங்களை அணுகி கடன் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி ஆகியோர் உடனிருந்தனர்.