300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
நடப்பு ஆண்டில் 300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ராஜபாளையத்தில் கொள்முதல் தொடங்கியது.
நடப்பு ஆண்டில் 300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ராஜபாளையத்தில் கொள்முதல் தொடங்கியது.
தொடக்க விழா
நடப்பு ஆண்டில் 300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் தொடக்க விழா ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமையிலும், வேளாண்மை துணை இயக்குனர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆதார விலை திட்டம் குறித்தும், தொழில்நுட்பம், மேலாண்மை குழுவின் தரம் மற்றும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காய்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்து லாபம் அடையலாம் என்றார்.
கொள்முதல்
வேளாண்மை துணை இயக்குனர் ரமேஷ் மின்னணு வேளாண் சந்தை திட்டம் குறித்தும், பண்ணையில் கொள்முதல் மூலம் விவசாயிகள் வேளாண்மை பொருட்களை பண்ணையிலேயே விற்கலாம் என்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொண்டு வந்தால் லாப காய்கள் இல்லாமல் தேங்காய்களை மின்னணு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யலாம் என தெரிவித்தார்.
கொப்பரை தேங்காயில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு மிகாமலும் பூஞ்சானம் தாக்கிய மற்றும் கருப்பு நிற கொப்பரைகள், சுருக்கம் கண்ட கொப்பரைகள், சில்லு ஆகியவை 10 சதவீதத்திற்கு மிகாமலும், நியாயமான சராசரி தரங்களுடன் கொண்டு வந்து விற்பனை செய்ய நிலச்சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், ஆதார் நகல், செல்போன் எண் போன்ற ஆவணங்களுடன் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
வங்கி கணக்கு
விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தொடக்க விழாவில் வேளாண் விற்பனை குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்களை அறிய ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குனர், விற்பனை குழு செயலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.