தஞ்சை பெரியகோவில் நடை அடைப்பு
சூரியகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று மதியம் முன்கூட்டியே நடை அடைக்கப்பட்டது.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல், பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தென்படும் என தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த சூரிய கிரகணம் மாலை 5.14 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை தென்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களை கொண்டு பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை வெண்திரையில் விழச்செய்தும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பெரிய கோவில் நடை சாத்தப்பட்டது
மேலும் சூரியகிரகணத்தையொட்டி கோவில்களில் நடைசாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் வழக்கமாக நண்பகல் 12.50 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஆனால் நேற்று சூரிய கிரகணத்தையொட்டி முன்னதாகவே அதாவது நண்பகல் 12 மணிக்கே நடை சாத்தப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்
தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரியகோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் முன்கூட்டியே நடை சாத்தப்பட்டதால் பெரிய கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் முன்பு காத்துக்கிடந்தனர். பலர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
சிறப்பு அபிஷேகம்
சூரிய கிரகணம் முடிந்து இரவு 7 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று சூரிய கிரகணத்தையொட்டி நடை சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.