"2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம், வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள்!" - எடப்பாடி பழனிசாமி

கொளத்தூர் அதே நிலையில் வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2022-11-02 22:29 IST

சென்னை,

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி - கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், இந்த தி.மு.க. அரசின் முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் செயல்கள் உள்ளது.

இந்த அரசின் முதலமைச்சரின் இன்றைய பேட்டியில், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை, ஓராண்டில் நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட இந்த ஆட்சியாளர்கள், ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும் திட்டமிடப்பட்டு நடைபெற்று வந்த பணிகளில் ஒருசிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு "ஊரில் கல்யாணம், மாரில் சந்தனம்" என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்தி செல்வது கேலிக்குரியதாகும்.

5 ஆண்டுகள் சென்னை மேயராகவும், 5 ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார். அவர் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் தமிழ் நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ளம் தேங்காத நிலையை ஏற்படுத்தியிருந்தால் எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நாங்கள் எதுவும் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை அமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. இதனால்தான், அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ் நாடு முழுமைக்கும் எங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டப் பணிகளை மக்கள் நன்கறிவார்கள். உடனடி தீர்வாக, எனது தலைமையிலான ஆட்சியில், 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் 3-ஆக குறைக்கப்பட்டது.

சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 40 நீர்நிலைகளில் பணிகள் நடைபெற்று வந்தன. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு, ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே பணிகள் துவக்கப்பட்டன. இதனால்தான், சென்ற ஆண்டு பருவமழையின் போது, சென்னை வெள்ளத்தில் மிதந்தது.

இதேபோன்று கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் சுமார் 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் புதிய குடியிருப்புகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர். 48 கி.மீ நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள், ரொபோடிக் எஸ்கலேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு ஆண்டு முழுவதும் தூர்வாரும் பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மழைக் காலங்களில் மக்களுக்கு சேவையாற்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட (Command and Control Centre) கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் துவக்கப்பட்டது.

மாநகராட்சியில் உள்ள 16 சுரங்கப்பாதைகளிலும் மழை நீரை அகற்றவும், மிகவும் தாழ்வான இடங்களில் உள்ள தண்ணீரை அகற்றவும் 60 உயர்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இது தவிர 7.5 எச்.பி. திறன் கொண்ட சுமார் 600 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் மழைநீர் வடிகால் நிரந்தர தீர்வுக்காக அடையாறு பேசின், கோவலம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக்கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டன. இதன் மூலம், சென்னையில் உள்ள சுமார் 2,400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம் ஜெய்கா, ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம், நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணிகள் முடிக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டு, எங்களது ஆட்சி காலத்தில் சுமார் 1,240 கி.மீ. நீள வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த அரசின் முதலமைச்சரும், அதிகாரிகளும் சென்னை, கொளத்தூர் தொகுதியிலேயே சென்ற ஆண்டு படகில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்டது ஊரறிந்த உண்மை. அன்றைய தினம் எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் நானும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டேன். ஆனால், இன்றும் கொளத்தூர் அதே நிலையில் வெள்ளத்தில் மிதந்துகொண்டுதான் உள்ளது. இது வெட்கக்கேடானது.

சென்ற ஆண்டு (2021) மழையின்போது ஸ்டாலின் 750 கி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதைகள் தூர் வாரப்பட்டுள்ளது என்று பேட்டி அளித்திருந்தார். தற்போது (2022) நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் 1,200 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார். இருவரின் கூற்றுப்படி 1,950 கி.மீ. பணிகள் முழுமையாக முடிந்திருந்தால் இந்த ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.

இந்த அரசில் கடந்த ஆறு மாத காலமாக தமிழகம் முழுவதும் முறையாக திட்டமிடாததால், எங்கு திரும்பினாலும் சாலைகள் தோண்டப்பட்டு, ஏதாவது ஒரு வேலையை இந்த விடியா அரசு கமிஷனுக்காக செய்து வருகிறது என்று பல்வேறு தளங்களில் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே தோண்டப்படும் பள்ளங்களில் அமைக்கப்படும் கேபிள்கள் எதற்கு என்றே தெரியவில்லை. எந்த பள்ளம் மழைநீர் வடிகாலுக்குத் தோண்டப்படுகிறது என்றும், எந்த பள்ளம் கழிவுநீர் வடிகாலுக்கு தோண்டப்படுகிறது என்றும் தெரியாத நிலை இருக்கிறது. இது பற்றி நகராட்சி நிர்வாகத்தினரோ, ஒப்பந்ததாரரோ எந்த அறிவிப்பும், எச்சரிக்கைப் பலகையும், பணி நடைபெறும் இடங்களில் வைப்பதில்லை.

கடந்த வாரம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் தோண்டப்பட்ட பள்ளத்தில் எந்த முன்னெச்சரிக்கை பலகையும் இல்லாததால், ஒரு தனியார் தொலைக்காட்சி ஊழியர் அதில் விழுந்து மரணம் அடைந்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

இந்த அரசின் முதலமைச்சர், 1.11.2022 அன்று அதிகாரிகளிடம் காணொளி மூலம் உரையாற்றியுள்ளார். அப்போது, ஒவ்வொரு துறையினரையும் தனியாகப் பெயரிட்டு மக்கள் துயர் துடைப்புப் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கான காரணம் வெள்ள நீர் கால்வாயில் இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை தொடராமலும், திட்டமிட்டு முழுமையாக முடிக்காததாலும், வெள்ள நீர் போக முடியாமல் நிறைய இடங்களில் தேங்கியுள்ளது. இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இனியும், இந்த ஏமாற்று அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இனியும் எதற்கெடுத்தாலும் அதிமுக அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்பாமல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்த தி.மு.க. அரசுக்கு உண்டு. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்