அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே நம் இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

Update: 2024-01-07 06:48 GMT

சென்னை, 

தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன. 2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கின்றேன். பொதுவாக வெளியூர்களுக்கு செல்லும்போதுதான் கோட் சூட் அணிவேன். ஆனால் அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் இன்று கோட்-சூட் அணிந்துள்ளேன். சென்னையில் காலையில் மழை பெய்தது. அதுபோலவே முதலீடும் மழையாக பெய்யும் என்று நம்புகின்றேன். மாநாட்டை தலைமையேற்று நடத்தும் மத்திய மந்திரி பியூஸ் கோயலை மனதார பாராட்டுகின்றேன்.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து கொண்டிருக்கிறது. இந்த பொருளாதார மாநாட்டின் மூலம் மேலும் பொருளாதாரம் உயரும் என்று நம்புகின்றேன். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலீட்டாளர்களின் முதல் மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.

மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பு திறனை காண்பிக்க இந்த மாநாடு நடைபெறுகிறது. தொழில்மயமாக்கல் அத்தியாயத்தில் மகத்தான வளர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளது. இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. ஆட்சியின் மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் இங்கு முதலீடுகள் குவிகின்றன. 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொழில்த்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியை நாம் இலக்காக கொண்டுள்ளோம். முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது, என்று அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்