தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம்
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.;
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சித்து வருவதாக கூறி விவசாயிகள் தங்களது நெற்றி, கைகளில் நாமம் போட்டு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி குளங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், தைல மரம் பயிர் செய்வதை தடை செய்ய வேண்டும், ஆயக்கட்டு ஏரி, குளங்களில் கிராவல் மண் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பயன்பெற புதுக்கோட்டையில் அரசு கரும்பு ஆலை நிறுவ வேண்டும். கரைபுரண்டு கடலுக்கு செல்கின்ற காவிரி நீர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை தெற்கு வெள்ளாறு வரை இணைக்க வேண்டும், மழைக்கால தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஆலங்குடியில் நிலக்கடலைக்கான அரசு ெதாழிற்சாலை நிறுவ வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பூ.விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ''ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதில் 75 சதவீதம் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை வரவேற்றாலும், உடனடியாக அவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்தசாமி, ஒன்றிய அமைப்பாளர்கள் புஷ்பராஜ் (அறந்தாங்கி), முருகையன் (திருமயம்), மணி (கறம்பக்குடி), பூபாலன் (விராலிமலை), தாமரைசெல்வன் (குன்றாண்டார்கோவில்) உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.