உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் மாநிலமாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில், ஒருவர் கூட இல்லாத நிலைய விரைவில் அடைய முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-24 03:36 GMT

சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதல் -அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட 4ம் ஆண்டு நிறைவு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் உறுப்பு மாற்று தின நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தர்.

நிகழ்ச்சிக்குப் பின் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது :-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.40 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக உள்ளனர். மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி முதல் ஒருங்கிணைக்கப்பட்டு 4ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று(நேற்று) கொண்டாடப்படுகிறது.

ஒருங்கினைக்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகள் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது, தற்போது சைதாப்பேட்டை , நுங்கம்பாக்கம் ஆகிய 2 இடங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தில் 2021-ம் ஆண்டு முதல் 'விடியல்' என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு உறுப்பு தானங்கள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 1559 மொத்த உறுப்பு கொடையாளர்கள் மூலம், 5687 உறுப்புகளும், 3629 திசுக்களும் தானமாக பெறப்பட்டது.

உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்விலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் மாநிலமாக உள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டு தற்போது இருந்துவருகிறது. விரைவில் தமிழகம் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் ஒருவர் கூட இல்லாத இலக்கை விரைவில் அடைய முடியும்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாகடர் நாராயணபாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பின செயலாளர் டாக்டர் காந்திமதி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்