நீதியை காப்பதில் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் பேச்சு
சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் இவ்விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, வெ.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
பொதுப்பணித்துறை சார்பில் 315 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் 5.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. அதேபோன்று பாரம்பரியமிக்க சட்டக்கல்லூரி கட்டிடத்தை புனரமைக்க ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான கோப்புகள் அனைத்தும் விரைவாக பரிசீலித்து. 4 நாட்களில் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது,
அரசுக்கு எந்த நிதி நெருக்கடி இருந்தாலும், நீதிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்று இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை முனீஸ்வர்நாத் பண்டாரியின் பாராட்டு விழா என்றே சொல்லலாம். குறுகி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும், புதிய கட்டிடங்களையும் மேற்கொண்டுள்ளார்.
நீதித்துறையின அக்கறை செலுத்தி, முதல்-அமைச்சரின் எண்ணங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய ஒரு தலைமை நீதிபதியாக அவர்உள்ளார். அதனால்தான் ஆட்சித்துறையும், நீதித்துறையும் இணைந்து நீதியை காப்பதில் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பேசினார்.