தமிழ்நாடே முதல்-அமைச்சர் ஸ்டாலினின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது - சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Update: 2023-01-11 08:26 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை கவர்னர் முறையாக முழுமையாக படிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று கவர்னர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையின்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும். கவர்னர் இருக்கை எதிரே நின்று கோஷம் எழுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், கவர்னர் உரையின் போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிநுட்பத்தால் தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்துள்ளார். தமிழ்நாடே முதல்-அமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்