'மணிப்பூரில் இருந்து வந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மணிப்பூரில் இருந்து வந்த விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியுடன் பயிற்சி பெற்று வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்திற்கு வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்று மணிப்பூரில் இருந்து 15 வாள்வீச்சு வீரர்கள் சென்னைக்கு பயிற்சிக்காக வருகை தந்துள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி மேற்கொண்ட மணிப்பூர் வாள்வீச்சு வீரர்களை தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூரில் இருந்து வந்துள்ள வீரர்கள் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்களுக்கான உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீரர்கள் மகிழ்ச்சியுடன் பயிற்சி பெற்று வருவதாகவும், மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.