முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் - டிடிவி தினகரன்

முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-11-08 10:55 GMT

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

சுரங்கம், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கி வரும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முல்லைப் பெரியாறின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி மற்றும் நீர் கசியும் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, பருவகால மாறுபாடுகளின்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் நிலவரம் மற்றும் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து வந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்