"ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2022-08-02 17:01 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறிவிடும்.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது; மாறாக பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவே இருக்கும். புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அதைத் தவிர்க்க படிம எரி பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது.

இத்தகைய தருணத்தில் காவிரி படுகையை அழித்து விட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். காவிரி பாசன மாவட்டங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் ஒன்று கூட இன்று வரை தொடங்கப்படவில்லை. அதனால், அவை அனைத்தும் புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் அவை அனைத்தையும் கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், அவற்றுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்