தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-05 18:28 GMT

தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்திட வேண்டும்.

அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாரபட்சத்தை கைவிட்டு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 வழங்கிட வேண்டும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் கரூர் வணிகவரித்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என்பன உள்பட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்