தமிழ் மாடலா? திராவிட மாடலா? விவாதிக்க பா.ஜ.க. தயார்- அண்ணாமலை

தமிழ் மாடலா? திராவிட மாடலா? என்பது குறித்து விவாதிக்க பா.ஜ.க. எப்போதும் தயாராக இருப்பதாக திண்டிவனத்தில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.;

Update: 2022-09-24 21:33 GMT

திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காப்பர் விலை உயர்வு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தமிழகத்தில் புவியியல் ஆர்வலர்கள், என்.ஜி.ஓ.க்கள் என பல்வேறு அமைப்பினர் எதிர்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த என்.ஜி.ஓக்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. எல்லோருமே அமைதியாக இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பரின் விலை 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. காப்பர் விலை ஏற்றத்தால் அதை சார்ந்த பொருட்களின் விலையும் ஏறியுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீ்சி இருப்பதோடு, பா.ஜ.க.வினரின் பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. தொண்டர்களை நாங்கள் அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறோம்.

விவாதிக்க தயார்

தமிழ் மாடலா?, திராவிட மாடலா? என்பதை விவாதிக்க பா.ஜ.க. எப்போதுமே தயாராக இருக்கிறது. 70 ஆண்டுகளில் தி.மு.க.வின் சாதனை திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். அதையும் விவாதிக்க தயாராக இருக்கின்றோம்.

அமைச்சர் பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பா.ஜ.க. மாநில துணை தலைவர் ஒருவர் அவருடன் விவாதிக்க தயாராக வருவார். அதே போல் தி.மு.க. தலைவர் எப்போது தயார் என்றாலும் அவர் குறிப்பிடும் இடத்துக்கு பொன்முடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் வருகிறேன். இவை அனைத்தையும் நேரலையில் மக்கள் பார்க்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்