பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

Update: 2024-09-04 00:23 GMT

சென்னை,

பிளஸ்-1 மாணவர்களுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 19-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 'தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு' நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசின் 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக்கத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயிலும் மாணவர்கள் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து ரூ.50 விண்ணப்ப கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்