குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டினால் தமிழ் மொழி வளரும்: கி.வீரமணி

தமிழர்களுக்கு பொங்கலை தவிர வேறு எந்த பண்டிகைகளும் தமிழ் பெயரில் இல்லை என்று கி.வீரமணி கூறினார்.

Update: 2024-01-18 17:45 GMT

சென்னை,

பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 30-ம் ஆண்டு விழா, திராவிடர் திருநாள் பொங்கல் விழா, பெரியார் விருது வழங்கும் விழா சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு குன்றக்குடி அடிகளார் படத்தை திறந்து வைத்தும், கவிஞர் கடவூர் மணிமாறன், வாணியம்பாடி அப்துல் காதர் ஆகியோருக்கு பெரியார் விருதுகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரியார் குறித்த சிந்தனைகள் குன்றக்குடி அடிகளாருக்கு அதிகம் இருந்தது. அதனால் தான் அவருடைய உருவப்படத்தை இந்த விழாவில் நாம் திறந்து வைத்திருக்கிறோம். குன்றக்குடி அடிகளார் தொடங்கிய முந்திரி எண்ணெய் தொழிற்சாலைக்கு பெரியாருடைய பெயரை வைத்ததுடன், என்னை திறந்துவைக்க வைத்தார்.

தமிழர்களுக்கு பொங்கலை தவிர வேறு எந்த பண்டிகைகளும் தமிழ் பெயரில் இல்லை. தமிழர்களான நாம் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரை சூட்ட வேண்டும். தமிழன், தமிழர், தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். மொழியில் கலப்படம் செய்வதால் அந்த மொழி மட்டுமின்றி, பண்பாடும் சோ்ந்து அழிந்துவிடும். பண்பாடு அழிந்து விட்டால் நம்முடைய அடையாளம் காணாமல் போய்விடும். இதுபோன்ற விழாக்கள் நடத்துவது நம்முடைய பெருமைக்காக அல்ல, நம்முடைய உரிமையை காப்பதற்காக நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்