கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சி
நாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.;
தமிழ்க்கனவு நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3-ந் தேதி தொடங்கப்பட்டு, ஏப்ரல் 24-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வகையில் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 100-வது நிகழ்ச்சியில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கு இணங்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளை கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த பரப்புரையின் தொடர்ச்சியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசினார்.
மாணவர்களுக்கு பரிசு
மேலும், "குறிஞ்சித் தமிழ்" என்னும் பொருண்மையில் கவிஞர் அறிவுமதி கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் பங்கேற்ற மாணவர்களுக்கு "உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி", "தமிழ்ப் பெருமிதம்" ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில் சொற்பொழிவுகளை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும், கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) திருநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.