கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கல்லூரி மாணவ-மாணவிகளிடையே உணர்த்திடும் பொருட்டு "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி தமிழக அரசால் நடத்தப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக சிறப்பாக நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நடப்பாண்டில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க தமிழகம் முழுவதும் 200 கல்லூரிகளில் "மாபெரும் தமிழ்க் கனவு"அடுத்த கட்ட நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ள மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்து கொண்டு "தமிழ்நாட்டின் வளர்ச்சி கதை" என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே உரை நிகழ்த்த உள்ளார். இதில் 11 கல்லூரிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளார்கள். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அரசின் திட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் குறித்த விளக்க கையேடுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது, என்றார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.