தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் ரகளை
தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் ரகளையில் ஈடுப்பட்டார். அப்போது கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தினார்;
சென்னையை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனங்களுக்கான 37 ஆர்.சி.புத்தகங்கள்(ஸ்மார்ட் கார்டு)மாயமானது. இது தொடர்பாக போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் பாலாஜி நேற்று முன்தினம் மாலை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்த சிறிய கதவை காலால் எட்டி உதைத்து உடைத்து, ஆக்ரோஷமாக வெளியே வந்து அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்த கட்டையை எடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவரை அதிகாரிகள், ஊழியர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரேநேரத்தில் 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணிகள் பாதிப்படைந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கே.கே.நகர் மற்றும் குன்றத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள பணியாளர்களை கூடுதல் பொறுப்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்.