தமிழக கவர்னர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழக கவர்னர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. கார் வெடிப்பு வழக்கை கோவை போலீசார் திறமையாக கையாண்டு உள்ளனர்.

Update: 2022-10-30 06:16 GMT

ராமநாதபுரம்,

கோவை வெள்ளலூர் பஸ் நிலையம் இடம் மாற்றம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை ரூ.26 கோடிக்கு சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.140 கோடிக்கு சாலை சீரமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் ரூ.210 கோடிக்கு 117 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் எப்படி முழுஅடைப்பு அறிவிக்க முடியும்? கோர்ட்டில் தனக்கு தொடர்பில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் தெரிவித்து இருப்பது ஏற்புடையது அல்ல. ஒரு கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசி முழு அடைப்பை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அல்லது முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்.

தமிழக கவர்னர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. கார் வெடிப்பு வழக்கை கோவை போலீசார் திறமையாக கையாண்டு உள்ளனர். உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர், முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வெள்ளலூர் பஸ் நிலையம் இட மாற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்