திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-05-18 19:22 GMT

சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் கீழ்க்கண்ட 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) அதிகபட்சம் 25 நபர்கள் வரை ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகை ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவைகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள் அல்லது கடந்த 2 ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகள்

கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் அதிகபட்சம் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 75 நபர்களுக்கு அதிகபட்ச உதவித்தொகை ஓராண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வழங்கப்படும். அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.

1.12.2022 அன்று 23 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் அதிகபட்சம் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 100 நபர்களுக்கு அதிகபட்சம் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும். 1.12.2022 அன்று 20 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டங்களின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். மேற்காணும் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் என்ற தகவல் மையம் மற்றும் 9514000777, 7825883865 என்ற செல்போன் எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்