தை அமாவாசை: திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள்
தை அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைகளில் குவிந்தனர்.
தூத்துக்குடி,
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர்.
அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலிலும், தை அமாவாசையையொட்டி இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதேபோல், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.
அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநா தீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.