தாசில்தார் பணி இடமாற்றத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்:தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில், தாசில்தார் பணி இடமாற்றத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-01 18:45 GMT

உள்ளிருப்பு போராட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலக அறை முன்பு அவர்கள் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரீப் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அது பொய்யான குற்றச்சாட்டுகள் என்று நாங்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தோம். இதுதொடர்பான விசாரணையில் தாசில்தார் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தெரியவந்தது. இதனால் தாசில்தாருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தாசில்தார் இடமாற்றம்

இதற்கிடையே, பெரியகுளம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜமாபந்தியை புறக்கணிக்கப் போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து ஜமாபந்தியை நடத்தினர். இந்நிலையில், பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரிப்பை ஆண்டிப்பட்டிக்கு மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை கண்டித்தும், உத்தரவை ரத்து செய்யக்கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை 5.30 மணியளவில் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்