சுவாமிநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூல்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூலானது.

Update: 2022-06-09 20:13 GMT

கபிஸ்தலம்:-

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூலானது.

சுவாமிமலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 13 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணி நடைபெறும். அதேபோல பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி கணக்கிடப்படும்.

ரூ.55 லட்சம் வசூல்

அதன்படி நேற்று முன்தினம் சுவாமிநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி மற்றும் தங்கம், வெள்ளியை கணக்கிடும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் நகை சரிபார்ப்பு அதிகாரி ராமு மற்றும் கோவில் பணியாளர்கள், தாராசுரம் கே. எஸ்.கே. கல்லூரி மாணவ-மாணவிகள் காணிக்கையை எண்ணினர்.

இதில் காணிக்கையாக ரூ.55 லட்சத்து 88 ஆயிரத்து 144 வசூலானது. ஒரு கிலோ அளவில் வெள்ளி பொருட்கள், 100 கிராம் அளவில் தங்க காசுகளும் காணிக்கையாக கிடைத்தன. வசூலான காணிக்கை கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்