விழுங்கிய கோழி குஞ்சு, முட்டைகளை கக்கிய பாம்பு
கடலூரில் விழுங்கிய கோழி குஞ்சு மற்றும் முட்டைகளை பாம்பு கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.;
கடலூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் துரை (வயது 55), தொழிலாளி. இவர், தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் அருகில் கோழி கூட்டை வைத்திருந்தார். இதில் ஒரு கோழி 15-க்கும் அதிகமான முட்டைகள் இட்டு, அடைகாத்து வந்தது. அவற்றில் சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை துரை, கோழி கூட்டை பார்த்தார்.
அப்போது அங்கு அடைகாத்த கோழி செத்து கிடந்தது. அதன் அருகில் ஒரு பாம்பு முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த துரை, உடனடியாக இதுபற்றி பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தார்.
முட்டைகளை கக்கிய பாம்பு
அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்டது சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு என்பதும், அது 7 முட்டைகளை விழுங்கியதும் தெரியவந்தது. இதற்கிடையே பிடிபட்ட அந்த பாம்பு திடீரென விழுங்கிய முட்டைகளை அடுத்தடுத்து கக்க தொடங்கியது. அப்போது அது கோழி குஞ்சு ஒன்றையும் கக்கியது. அதாவது அடைகாத்த முட்டையில் இருந்து பொரித்திருந்த கோழி குஞ்சை விழுங்கிய பிறகு அந்த பாம்பு, முட்டைகளை விழுங்கியது தெரியவந்தது. தொடர்ந்து பாம்பு பிடி வீரர் செல்லா, அந்த பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்றார். இதற்கிடையே பாம்பு முட்டைகளை விழுங்கியதும், அதை கக்கிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.