நடத்தையில் சந்தேகம்: மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46). இவருக்கும் இவரது மனைவி ஸ்ரீதேவி (39) க்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக ஸ்ரீதேவி திருப்போரூர் பகுதி ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி மீது சந்தேகமடைந்த கணவர் சுந்தரமூர்த்தி அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபடைந்த கணவர் சுந்தரமூர்த்தி சமையல் எண்ணெய்யை கொதிக்க வைத்து அதை மனைவி ஸ்ரீதேவி மீது ஊற்ற முயன்றார். அதை பார்த்த ஸ்ரீதேவி அவரை தடுக்க முயன்றார். இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே கொத்தித்த எண்ணெய்யுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கொதிக்கும் எண்ணெய் கணவன் மற்றும் மனைவி இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த மூத்த மகள் வீட்டில் இருந்த அருவாமணையால் தந்தை சுந்தரமூர்த்தியின் தலை மற்றும் கை போன்ற பகுதிகளில் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். ஸ்ரீதேவி மற்றும் சுந்தரமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.