புதன்சந்தையில் சந்துக்கடைகளுக்கு மதுபானம் வழங்கிய விற்பனையாளர் பணி இடைநீக்கம்

Update: 2023-06-05 18:45 GMT

கூடுதல் விலைக்கு விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா?, கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, அனுமதியற்ற மதுக்கூடங்கள் செயல்படுகிறதா? மற்றும் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் டாக்டர் உமா உத்தரவிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன் தலைமையில், உதவி ஆணையர் (கலால்) மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சோதனை நடத்தினர்.

அந்த ஆய்வுகளின்போது நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், சீத்தாராம்பாளையம், வையப்பமலை மற்றும் ஆண்டகலூர் கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து 7 கடைகளின் ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தற்காலிக பணி இடைநீக்கம்

மேலும் புதன்சந்தையில் அனுமதியின்றி மதுக்கூடம் ஒன்று இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 166 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அனுமதி இல்லாத மதுக்கூடத்திற்கு மதுபானங்களை வினியோகித்ததாக, டாஸ்மாக் கடை விற்பனையாளர் ரத்தினத்தை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார். இதுவரை அனுமதி இல்லாத மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்