திருடுபோன மோட்டார் சைக்கிளின் ஆவணத்தில் பெயர் மாற்றம்: பெண் ஊழியர்கள் 2 போ் பணியிடை நீக்கம் கடலூரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருடு போன மோட்டார் சைக்கிளுக்கான ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-11-09 18:45 GMT


கடலூர் முதுநகர்,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அமுதராஜ். இவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்ளாததால், தனது மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்தார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருக்கும் நிலையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்கிற பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்து அமுதராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

கடலூரில் விசாரணை

இதையடுத்து, தனது மோட்டார் சைக்கிளை மீட்டு தரக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில், சென்னை குமரன் நகர் போலீசார், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பெண் ஊழியர்கள் 2 பேர்

விசாரணையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் சாந்தி(வயது 50) மற்றும் அலுவலக உதவியாளர் கவிதா (47) ஆகியோரின் அலட்சியத்தால் தான் அமுதராஜியின் மோட்டார் சைக்கிளுக்கான உரிமம் ஆவணங்கள்(ஆர்.சி.புக்) எந்தவித உரிய ஆவணங்களும் இன்றி பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பண்ருட்டியில் இயங்கி வரும் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் தான், ஆவணங்கள் அனைத்தும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்ட பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் சென்னை போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்