தொங்கு பாலம் விபத்து: அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-10-31 02:00 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலத்தில் விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றுக்குள் விழுந்தவர்களில் பலர் நீரில் மூழ்கி இறந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்."

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்