சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: உண்ணாவிரத போராட்டம் நடத்த அ.தி.மு.க முடிவு

நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2024-06-26 08:07 GMT

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்திலும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் , சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அ.தி.மு.க முடிவு செய்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்