மருத்துவ முகாமில் பா.ஜ.க. தலைவர் பங்கேற்றதால் மேலாளர் பணி இடைநீக்கம்
அரசு போக்குவரத்து கழக மருத்துவ முகாமில் பா.ஜ.க. தலைவர் பங்கேற்றதால் மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.;
மதுரை,
மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.அதில் கண்பார்வை குறைபாடு உள்ள பணியாளர்களுக்கு கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டார். ஆனால் எந்த அரசு பதவியிலும் இல்லாத, ஒரு கட்சியை சேர்ந்தவரை அழைத்து எப்படி விழா நடத்தலாம் என கம்யூனிஸ்டு கட்சியினர் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கிளை மேலாளர் அபிமன்யு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக அபிமன்யு பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.