கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கணக்கெடுக்கும் பணி-24-ந் தேதி முதல் நடக்கிறது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி முதல் 2 கட்டமாக கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.;
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி முதல் 2 கட்டமாக கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வோனா, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்களை கைரேகை பதிவு செய்து பெறுவதற்காக மாவட்டத்தில் 829 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக 695 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மையங்கள் இரண்டாவது கட்டத்தில் பயன்படுத்தப்படும். இந்த பணி 2 கட்டமாக நடைபெற உள்ளது.
முதல் கட்ட பணிகள் ஊரகப் பகுதிகளில் நடைபெறும். இந்த பணிகள் வருகிற 24-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெறும். இதற்காக 695 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய பயனாளிகள் ஆதார் அட்டை, மின் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொடுத்தால் போதுமானது.
தன்னார்வலர்கள்
இந்த திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைதாரர்கள் வரை உள்ளவர்களுக்கு ஒரு தன்னார்வலர் மற்றும் ஒரு பயோமெட்ரிக் மிஷின் வழங்கப்படும். இந்த பணியில் 1011 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் தவிர சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பயன்படுத்தப்படுவார்கள். 500 பேருக்கு மேல் உள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் மற்றும் 2 பயோமெட்ரிக் எந்திரங்கள் வழங்கப்படும்.
ஆகஸ்டு 5-ந் தேதிக்கு இரண்டாவது கட்டமாக பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பெறப்படும். உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பதிவு செய்யப்படும்.
போலீஸ் பாதுகாப்பு
இதற்காக எந்தெந்த தேதியில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வர முடியாதவர்கள் மற்றொரு தேதியில் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியுடைய பயனாளிகள் விடுபடாத வகையில் கவனமாக பெயர் பதிவு செய்யும்படி தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் மையத்தில் தலா இரண்டு போலீசார் பாதுகாப்பிற்கு இருப்பார்கள். அத்துடன் அவசர தேவைக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.