செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-07-01 09:06 GMT

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் புக்கத்துரை கிராம பஞ்சாயத்தின் கீழ்வரும் கோடிதண்டலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த கிராமத்தில் உள்ள 15.47 ஏக்கர் தரிசு நில விவசாயிகளுடன் கலந்துரையாடி மண் பரிசோதனை ஆய்வு அறிக்கையின் படி தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற தோட்டக்கலை பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் தென்னை போன்ற பயிர்களை நடவு செய்து பயனடைய ஆலோசனை வழங்கினார்.

மேலும் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் கிடைக்கும் நீரைகொண்டு சொட்டு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி சாகுபடி செய்யுமாறும் மழை காலங்களில் கூடுதல் வருமானம், பெறும்பொருட்டு பழமர பயிர்களுக்கு இடையில் காய்கறி பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்தும் பயனடைய கேட்டுக்கொண்டார்.

80 சதவீதம் நிதி

அனைத்து துறை திட்டங்களையும் ஒருங்கிணைத்து திட்ட பயன்களை அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் சென்றடையுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். நடப்பு ஆண்டில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 80 சதவீதம் நிதியை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட கிராமங்களில் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.

அந்த கிராம பஞ்சாயத்தை உள்ளடக்கிய அனைத்து குக்கிராம பண்ணை குடும்பங்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் இலக்கினை பிரித்தளித்து வழங்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் வையாவூர் தொகுப்பு கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய வேளாண் திட்டத்தில் நாகராஜ் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட நிரந்தர கல்பந்தல் வயலை பார்வையிட்டு விவசாயியிடம் கலந்துரையாடி திட்ட பலனை உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வருமானம் பெறுமாறும் இந்த திட்டத்தின் பலனை பிற விவசாயிகளுக்கும் எடுத்து கூறி தோட்டக்கலை அலுவலர்களை பயிர் பரப்பினை நிரந்தர முறையில் அதிகரிக்க கூறினார்.

சொட்டு நீர் பாசன திட்டம்

இதுபோல அண்டவாக்கம் பஞ்சாயத்து கிராமத்தில் கோபால் என்ற விவசாயி இயற்கை வேளாண்வழி முறையில் தோட்டக்கலை துறையின் சொட்டு நீர் பாசன திட்டத்தை பயன்படுத்தி அடர் நடவு செய்துள்ள மா மற்றும் கொய்யா பயிர்களையும் பிற பயிர்களான தென்னை, நெல்லி, எலுமிச்சை பயிர்களையும் பார்வையிட்டார். இந்த விவசாயி அங்ககச் சான்று பெறுவதற்கு தோட்டக்கலை துறையின் முலம் விண்ணப்பித்து தற்போது 2-ம் ஆண்டுக்குரிய சான்று பெற தகுதி பெற்றுள்ளார் என்பதை விவசாயியிடம் கேட்டறிந்தார். மேலும் இந்த விவசாயி செய்து வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு உரக்கூடம் போன்றவற்றை கேட்டறிந்தார். மேற்படி பண்ணை விவசாய கழிவுகளையும், கால்நடை கழிவுகளையும் உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண்ணை செலவுகளை குறைக்குமாறும், இதன் மூலம் வருமானத்தை உயர்த்துமாறும் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ், தோட்டக்கலை துணை இயக்குனர் சாந்தா செலின் மேரி, உதவி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்