வங்கிகள், நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்
வங்கிகள், நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்;
திருக்கோவிலூர்,
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் மற்றும் சென்னையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் அலுவலர்கள், நகைக்கடை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வரவேற்றார்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி கலந்துகொண்டு பேசும்போது, வங்கிகள், நகைக்கடைகள் மற்றும் வட்டி கடைகளில் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக அமைக்க வேண்டும். நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்கள் இணைந்து காவலாளிகளை நியமித்து இரவு விடிய விடிய கண்விழித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தி போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வங்கி, நகைக்கடை மற்றும் வட்டிக்கடைகளுக்கு வரும் நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள், நகைக்கடை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.