3 ஆண்டுகளாக தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
ராமநாதபுரம் அருகே மணல் அள்ளுவதை தடுக்க சென்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ளது இளமனூர். இந்த ஊர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி மணல் அள்ளுவதை தடுக்க சென்ற மோகன் (வயது 47) என்பவரை மர்ம கும்பல் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் 8-வது குற்றவாளியான ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ஈல்முருகன் என்ற கணேச முருகன் (வயது36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 வருடங்களாக தேடப்பட்டு வந்த ஈல்முருகன் என்ற கணேச முருகன் நேற்று காலை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் ஈல் முருகன் கடந்த 3 ஆண்டுகளாக மும்பையில் தங்கியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.