தா.பழூரில் 30-ந் தேதி சூரசம்ஹாரம்
தா.பழூரில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.;
தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வேத மந்திரங்கள் முழங்க மங்கள ஆரத்தி நடைபெற்றது.
கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டன. முருகப்பெருமானுக்கு சோடச உபச்சாரங்கள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க பிரகார உற்சவம், மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சக்திவேல் வாங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவம்பர் மாதம் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.