சாந்தநாத சாமி கோவிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-30 19:27 GMT

கந்தசஷ்டி விழா

சூரபத்மன் எனும் அசுரனை முருகப்பெருமான் 6 நாட்கள் போரிட்டு வதம் செய்த நிகழ்வு கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூரில் இவ்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றாலும் முருகப்பெருமான் திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெறும்.

இதேபோல முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ள கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவையொட்டி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு தினமும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

பக்தி பரவசம்

தொடர்ந்து மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பாடு நடைபெற்றது. இதில் சாமி கோவில் முன்பு இருந்து புறப்பாடு ராஜ வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. கோவில் முன்பு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யானை முக, சிங்க முக சூரன், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் முருகப்பெருமானின் வேலாயுதம் கொண்டு சூரபத்மனின் தலை அகற்றுவதை போல நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று திருக்கல்யாணம்

விழாவில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கறம்பக்குடி

கறம்பக்குடி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி தினமும் சாமிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் வந்த சூரனை முருக பெருமான் வதம் செய்தார். இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி சின்ன அண்ணாநகரில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மணமேல்குடி

மணமேல்குடி ஜெகதீஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாலை வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் சுப்பிரமணியர் சுவாமி சன்னிதானத்தில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. இதையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடியில் நாமபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் வள்ளி- தேவ சேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னதி உள்ளது. இங்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்