10% இட ஒதுக்கீட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரித்தரப் புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்கது - அண்ணாமலை

10% இட ஒதுக்கீட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரித்தரப் புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்கது என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2022-11-07 10:26 GMT

சென்னை,

சென்னையில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுஅரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாரத பிரதமர் கொண்டு வந்திருக்கிற இந்த 10 சதவீத உள் ஒதுக்கீடு நிச்சயமாக செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக மனதார வரவேற்கிறது.


இன்றைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வந்தால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு சலுகை பெறுபவர்களுக்கு எல்லாம் பாதிப்பு, குறிப்பாக ஓபிசி பிரிவில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோல எதுவுமே கிடையாது.

மத்திய அரசு யார் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு சலுகை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய உரிமைகள் எதுவும் இந்த தீர்ப்பால் பறிபோகாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பி.சி., எம்.பி.சி., உள்ஒதுக்கீடு நிலையாக மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதை காலம் காலமாக சொல்லி வந்தாலும், இதனை எதிர்த்து தமிழகத்தில் திமுக ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கையிலெடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டனர்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. இதற்கு பல வரையறைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு கிடையாது. சுப்ரீம் கோர்ட்டு சரித்தரப் புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அதை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்