தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சியளித்த சுந்தரேசுவரர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் சுந்தரேசுவரர் தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.;
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது. அதையொட்டி சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் காட்சி அளித்தார். பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினர்.
அங்கு மதியம் 1.10 மணிக்கு மேல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் சுவாமியாக ராஜா பட்டரும், பாண்டிய மன்னராக சண்முக சுந்தர் பட்டரும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்த லீலையை காணவும், அங்கு எழுந்தருளிய சுவாமியை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அலங்காரம்
இந்த திருவிழாவுக்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும், புட்டுத்தோப்புக்கு எழுந்தருளினர். அப்போது சுந்தரேசுவர பெருமானுக்கு தங்கத்தால் தலைப்பாகை கட்டி, அதன்மேல் தங்கக் கூடை இருக்குமாறு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து மாலை சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப எழுந்தருளி ஒர்க்ஷாப் ரோடு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக இரவு கோவிலை வந்தடைந்தனர்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை
பிட்டுக்கு மண் சுமந்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். அப்போது வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு யாருமில்லாமல் தவித்தார். அப்போது இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால் இறைவன் அவரது பங்கிற்கு ஒதுக்கப்பட்ட கரையை அடைக்காமல் பிட்டு சாப்பிட்டுவிட்டு, ஆடிப்பாடி ஆழ்ந்த துயில் கொண்டார். அப்போது வைகை ஆற்றை பார்வையிட வந்த பாண்டிய மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் படுத்திருந்த இறைவன் முதுகில் அடித்தான். அது அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் பிரம்பு அடிப்பட்டது.
அரசன் உண்மை உணர்ந்தான். அப்போது இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும்தான் இவ்வாறு செய்வதாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறைபணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான் என்று வரலாறு கூறுகிறது.