கோபி அருகே கொட்டித்தீர்த்த கோடை மழை:குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

கோபி அருகே கொட்டித்தீர்த்த கோடை மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

Update: 2023-03-29 21:29 GMT

டி.என்.பாளையம்

கோபி அருகே கொட்டித்தீர்த்த கோடை மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

குண்டேரிப்பள்ளம் அணை

கோபியை அடுத்த டி.என்.பாளையம் கொங்கர்பாளையத்தை அடுத்த வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடியாகும்.

இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாறு வழியாக வந்து சேருகிறது.

பாசன வசதி

இந்த அணையில் உள்ள 2 பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.48 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு தண்ணீர் வரத்து இ்ல்லை.

இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கோடை மழை கொட்டி தீா்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

உபரிநீர் வெளியேற்றம்

இதன்காரணமாக அணை அதன் முழு கொள்ளளவான 42 அடியை எட்டி உபரிநீர் வெளியேறியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்பட்ட உபரிநீரானது வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள 2 தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலந்தது.

Tags:    

மேலும் செய்திகள்